ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்துடன் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் - ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்துடன் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்துடன் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் - ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிலம் என்று நினைத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 160-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் வீடுகள் கட்டியுள்ள 12 ஏக்கர் 67 சென்ட் நிலப்பரப்பு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்பதால், கடந்த வாரம் வருவாய்த்துறை அதிகாரிகள் லட்சுமிபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபடுவதற்காக வந்தனர்.

இதற்கு ஆதனூர் லட்சுமிபுரம் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், 6 பேர் கொண்ட வருவாய்த்துறை குழுவினர் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் ஆதனூர் லட்சுமிபுரம் பகுதியில் குடியிருக்கும் பொது மக்கள் தாங்கள் குடியிருக்கும் இடங்களுக்கு பட்டா வழங்க கோரியும், திடீரென தனியார் நிறுவனம் தாங்கள் குடியிருக்கும் வீடுகளை அகற்றுவதற்கு தொடர்ந்து வருவாய் துறை மூலம் முயற்சி செய்வதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் லட்சுமிபுரம் பகுதி மக்கள் அனுமதி கேட்டு மனு அளித்தனர்.

ஆனால் போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருப்பதால் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்தனர். இதனை தொடர்ந்து ஆதனூர் லட்சுமிபுரம் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் போலீசாரின் தடையை மீறி நேற்று காலை லட்சுமிபுரம் பகுதியில் பந்தல் அமைத்து குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. சைலேந்திரன், மணிமங்கலம் உதவி போலீஸ் கமிஷனர் ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆதனூர் லட்சுமிபுரம் பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாங்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு குடியிருந்து வருவதால் எங்களுக்கு உடனடியாக அரசு பட்டா வழங்க வேண்டும், எங்களது குடியிருப்புகளை அகற்றக்கூடாது என்று ஆர்.டி.ஓவிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு ஆர்.டி.ஓ. உங்கள் கோரிக்கை சம்பந்தமான மனுவை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரிடம் நேரில் சந்தித்து வழங்குவதற்காக ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்அமுதன், ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி தமிழ்அமுதன் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் இன்றே மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே உங்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ஆர்.டி.ஓ. பொதுமக்களிடம் உறுதியளித்தார். இதனைதொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து சென்றனர்.

போலீசாரின் அனுமதி இல்லாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஆதனூர், லட்சுமிபுரம் குடியிருப்பு பொதுமக்கள் ஈடுபட்டதால் அந்த பகுதியில் மணிமங்கலம் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com