

நெல்லை,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவை இன்று அதிகாலை முதல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மொபைல் நெட்வொர்க் மற்றும் இணைய சேவை கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.திடீரென ஏற்பட்ட நெட்வொர்க் துண்டிப்பால் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இணையதள சேவையை நம்பியுள்ள பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பி.எஸ்.என்.எல். நிர்வாகம் உடனடியாக கோளாறை கண்டறிந்து சேவையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று காலை வரையிலும் டவர் பிரச்சினை நீடித்தது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.இதுகுறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் கூறுகையில், நெல்லை மற்றும் தென்காசி பகுதியில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளும் போது சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் அதிகாரிகளும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முடங்கிய பகுதிகளில் விரைவில் சேவை சரி செய்யப்படும் என கூறினர்.