

தமிழக அரசு சட்டமன்ற வரவு செலவு கூட்டத்தொடரில் திருத்தணி நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆணை வெளியிட்டது. இதனையடுத்து திருத்தணி நகராட்சி எல்லை விரிவாக்கம் தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்ப நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி திருத்தணி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களான கார்த்திகேயபுரம், வள்ளிமபுரம், கன்னிகாபுரம் (பகுதி), பட்டாபிராமபுரம் (பகுதி) ஆகிய பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க உத்தேசிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் திருத்தணி வருவாய்த்துறையினர் மூலம் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்திகேயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. தீபாவை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ. தீபா உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.