

குற்ற வழக்குகள் மறைப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), 88 அரசு இளநிலை குற்றவியல் வக்கீல் பணியிடங்களுக்கு 2013-ம் ஆண்டு விண்ணப்பம் கோரியது. இந்த தேர்வில் மங்கலநாதன் என்பவர் கலந்துகொண்டு, அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றார். இவரைப் போல தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமன உத்தரவு வழங்கும்படி தமிழக அரசுக்கு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் பரிந்துரை செய்தது.
தேர்வானவர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளனவா என்று போலீசார் நடத்திய விசாரணையில், மங்கலநாதன் மீது 2 குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. ஆனால் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு அனுப்பிய விண்ணப்பத்தில், தன் மீது குற்ற வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை என்று அவர் உறுதி அளித்து இருந்தார். உண்மையை மறைத்து விண்ணப்பம் செய்ததால், சட்ட விதிகளின்படி, அவரது தேர்வை ரத்து செய்தது மட்டுமல்லாமல், ஓர் ஆண்டுக்கு டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வில் கலந்துகொள்ளவும் தடை விதித்து, டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் உத்தரவிட்டது.
உள்நோக்கம் இல்லை
இதை எதிர்த்து மங்கலநாதன், ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில், குற்ற வழக்குகளை மறைக்க வேண்டும் என்று மனுதாரருக்கு உள்நோக்கம் எதுவும் இல்லை. 2013-ம் ஆண்டு மனுதாரரின் உடல்நிலை சரியில்லாதபோது, அவரது மனைவி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தார். அதனால் வழக்கு விவரங்களை குறிப்பிட முடியவில்லை. மேலும், 2 வழக்குகளில் ஒரு வழக்கில் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் மனுதாரர் விடுதலை செய்யப்பட்டார். மற்றொரு வழக்கை ஐகோர்ட்டு மதுரைக் கிளை 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரத்து செய்துவிட்டது. அதனால், அவருக்கு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம், இப்போது அவர் மீதான வழக்குகள் ரத்தும், விடுதலையும் செய்யப்பட்டாலும், விண்ணப்பிக்கும்போது அதை மறைத்து உள்ளார். அப்போது அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன என்று வாதிடப்பட்டது.
அதிகாரம் இல்லை
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி டீக்காராமன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு மற்றும் ஜி.ஹேமலதா உள்பட பலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தேர்வாணையத்தின் விதிமுறைகள் ஒரு வழிகாட்டுதல் மட்டுமே என்ற நிலையை மாற்றியமைத்து தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், ஒரு தவறான தகவலை விண்ணப்பத்தில் கொடுப்பது, குற்ற வழக்கு விவரங்களை மறைப்பது ஆகியவற்றுக்காக விண்ணப்பதாரரின் விண்ணப்பத்தை டி.என்.பி.எஸ்.சி. விதிகளின்படி நிராகரிப்பது என்பது கட்டாயமாகும். மேலும் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம், தேர்வர்களுக்கு வழங்கும் நிபந்தனைகள், விதிமுறைகள் ஆகியவை கட்டாயமானவை ஆகும். இதை மாற்றவோ, தளர்த்தவோ ஐகோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.
அதனால், குற்ற வழக்குகளை விண்ணப்பத்தில் மறைத்த மனுதாரரின் தேர்வை ரத்து செய்த டி.என்.பி.எஸ்.சி. உத்தரவு சரியானது. மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.