ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள நரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான வாய்க்கால் நீர் நிலை பகுதியில் 64 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற அதிகாரிகள் சார்பில் குடியிருப்பு வாசிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அதிகாரிகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர். மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் 80-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். வீடுகளை இடித்து அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ சைலேந்திரன், குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் மற்றும் வருவாய்த்துறையினரை முற்றுகையிட்டு அந்த பகுதியில் அமர்ந்து கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். இதனைதொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து வீடுகளை இடித்து அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். வீடுகளை இடிக்கும் போது வீட்டின் உரிமையாளர்கள் பொக்லைன் எந்திரத்தின் முன்பாக வீட்டின் வாசல் பகுதியில் அமர்ந்து வீட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீசார் அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து மீண்டும் ஆர்.டி.ஓ., தாசில்தாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எங்கள் பொருட்களை எடுக்க ஓரிரு நாள் அவகாசம் தந்துவிட்டு வீட்டை இடித்திருக்கலாமே. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை வைத்துக்கொண்டு நாங்கள் எங்கே தங்குவது. வீட்டில் உள்ள பொருட்களை எப்படி அப்புறப்படுத்துவது. வீடுகளை இடித்து அகற்றும் போது எங்களுக்கு ஏன் மாற்று இடம் தர வில்லை என அதிகாரிகளை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.

அதற்கு அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவுப்படி நாங்கள் வீடுகளை இடித்து அகற்றி வருகிறோம் என தெரிவித்தனர். அதற்கு பொதுமக்கள் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றுங்கள் கோர்ட்டு உத்தரவுப்படி எல்லா இடங்களிலும் வாய்க்கால் நீர்நிலைகள் பகுதிகளில் உள்ள வீடுகளை அகற்றி விட்டீர்களா? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 3 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com