

சென்னை,
தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத்துறை மூலமாக ஆவணப் பதிவுகள், திருமணப் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் நகல்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இச்சேவைகளைப் பெறுவதற்காகத் தமிழகம் முழுமையிலும் உள்ள 587 சார் பதிவாளர் அலுவலகங்களுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும்போது அவர்களை அதிகாரிகள் நடத்தும் விதம் குறித்து பதிவுத்துறைத் தலைவர் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளைச் சார் பதிவாளரிடமோ அல்லது அங்கு பணிபுரியும் உதவியாளர்கள் / இளநிலை உதவியாளர்களிடமோ சமர்ப்பிக்க வரும்போது, அவர்களின் மேஜைக்கு முன்பாக கண்டிப்பாக நாற்காலிகள் போடப்பட்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு அலுவலரின் மேஜைக்கு முன்னாலும் பொதுமக்களுக்காகக் குறைந்தபட்சம் இரண்டு நாற்காலிகள் கண்டிப்பாகப் போடப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்களை நாற்காலியில் உட்கார வைத்துதான் சார்பதிவாளர்கள் மற்றும் ஊழியர்கள் பேச வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும், பொதுமக்கள் எவரையும் நிற்க வைத்துக்கொண்டு அதிகாரிகள் பதிலளிக்கக் கூடாது. இது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளும், அறிவுரைகளும் ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யும்போது அத்தகைய நடைமுறை பல அலுவலகங்களில் பின்பற்றப்படவில்லை.
எனவே, இனிவரும் காலங்களில் மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள், துணைப் பதிவுத்துறைத் தலைவர் அலுவலகங்கள் மற்றும் பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறைகள் மூலம் சார் பதிவாளர் அலுவலகங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இந்த சுற்றறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை மீறி, பொதுமக்களை நிற்க வைக்கும் அதிகாரிகள் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.