தீவுத்திடலில் ரூ.113 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் பொது சதுக்கப் பணிகள்: முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு


தீவுத்திடலில் ரூ.113 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் பொது சதுக்கப் பணிகள்: முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு
x

சென்னை, தீவுத்திடலில் ரூ.113 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மையம் உள்ளடக்கிய பொது சதுக்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, தீவுத்திடலில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 113 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் 1,63,039 சதுர அடி கட்டடப் பரப்பளவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மையத்தை உள்ளடக்கிய பொது சதுக்கப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னையின் முக்கிய அடையாளமாகிய நேப்பியர் பாலத்தின் அருகில் தீவுத்திடலில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 113 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மையம் உள்ளடக்கிய பொது சதுக்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி மையம், நமது பாரம்பரியமிக்க கட்டடக்கலை அமைப்புடன், 40 கண்காட்சி அரங்குகள், பொது நிகழ்ச்சி கூடங்கள், உணவகங்கள், 8 மின் தூக்கி வசதிகள், 148 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 148 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதிகள் மற்றும் 200 நவீன கழிப்பிட வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

இக்கண்காட்சி மையம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் நிரந்தர மையமாக அமைக்கப்படுவதால், அரசின் பல்வேறு துறைகளின் செலவினங்கள் குறைக்கப்படுவதுடன், மக்களுக்கு தேவையான, அனைத்து மேம்பட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், அரசு துறைகளின் கண்காட்சிகள், கருத்தரங்குகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள் போன்ற அனைத்து பொது நிகழ்ச்சிகளும் இம்மையத்தில் நடத்தப்படும்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் க. பொன்முடி, பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

1 More update

Next Story