அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் நிலங்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் நிலம், கட்டிடம் உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.
அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் நிலங்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு
Published on

சென்னை,

தமிழக இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் 36 ஆயிரத்து 861 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் பல ஏக்கர் நிலங்கள் தனியார் வசம் உள்ளன. இதற்கு பலர் வாடகை மற்றும் குத்தகை தொகையை கோவில்களுக்கு செலுத்தினாலும் சிலர் வாடகை தராமல் இருப்பதுடன், கோவில் நிலங்களை தங்கள் பெயர்களுக்கும் மாற்றிக்கொள்வது தெரியவந்து உள்ளது. இதனால் கோவில்களுக்கு வரவேண்டிய வருமானம் முறையாக வராததால் கோவில்கள் பராமரிப்பு இன்றி கிடக்கிறது.

இந்தநிலையில், கோவில்களுக்கு நிலங்களை வழங்கியவர்களின் விருப்பத்திற்கு மாறாக அந்த நிலங்களை விற்பனை செய்யக்கூடாது. குத்தகை, வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை 6 வாரங்களில் தயாரித்து இணையதளத்தில் வெளியிட வேண்டும். அத்துடன் குத்தகை, வாடகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செலுத்தாதவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.250 கோடி மதிப்புள்ள வடபழனி கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளது.

அறநிலையத்துறை நடவடிக்கை

இந்தநிலையில் கோவில்களுக்கு சொந்தமான நிலம் தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை கடந்த வாரம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். தற்போது முழுவீச்சில் இந்தப்பணி நடந்து வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 36 ஆயிரத்து 861 கோவில்களுக்கு சொந்தமான நிலம் தொடர்பான ஆவணங்கள் நேற்று முழுமையாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இதில் கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் நிலம் என்ற மென்பொருளோடு ஒப்பீடு செய்யப்பட்டு, முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என 3 இனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்தவகையில் முதல் கட்டமாக 3 லட்சத்து 43 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்கள் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது கோவிலுக்கு சொந்தமான உள்ள மொத்த நிலங்களில் 72 சதவீத நிலங்களாகும்.

இதனை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். இதுகுறித்த தகவல்களை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் எடுத்து கூறினார். அப்போது இணை ஆணையர்கள் சி.ஹரிப்பிரியா, த.காவேரி, ரேணுகாதேவி மற்றும் உதவி ஆணையர் கவெனிதா மற்றும் துணை செயல் அலுவலர்கள் இருந்தனர்.

பொதுமக்கள் பார்வையிடலாம்

எந்த கோவிலுக்கு சொந்தமான நில விவரங்களை எப்போது வேண்டுமானாலும் பொதுமக்கள் hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். தேவைப்பட்டால் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் திருக்கோவில்கள் நிலங்கள் என்ற தலைப்பை தேர்வு செய்து அதன் பின்னர் மாவட்ட வாரியாக உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் கோவில் நிலங்களின் அ பதிவேடு, நகர நில அளவை பதிவேடு, சிட்டா ஆகியவற்றை பார்வையிட முடியும்.

இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்காக கோரிக்கைகளை பதிவிடுக என்ற தலைப்பை தேர்வு செய்து பொதுமக்கள் கருத்துக்களையோ அல்லது கோரிக்கைகளையோ தெரிவிக்கலாம்.

கோவில்களுக்கு சொந்தமான ஆவணங்கள் வருவாய்த்துறை மற்றும் நிலஅளவைத்துறை ஆவணங்களோடு சரிபார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்தும் கோவில்களின் பெயரிலேயே இருக்கும்.

பத்திரப்பதிவு செய்ய முடியாது

கோவில் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படப்பட்டு உள்ளதால் இனிமேல் யாரும் கோவில் நிலங்களை விற்க முடியாது. அதேபோல் கோவில் நிலங்களை தங்கள் பெயருக்கும் மாற்ற முடியாது. கோவில் நிலங்களின் விவரங்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோவில் நிலங்களை இனிமேல் யாரும் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்று அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com