புதுச்சேரி முதல்-அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு முடித்துவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

கவர்னர் வீட்டுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மீது வழக்குப் பதிவு செய்யக்கோரிய மனுவை முடித்துவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி முதல்-அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு முடித்துவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், புதுச்சேரியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், லோக் ஆயுக்தாவை அமல்படுத்தக் கோரி புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கவர்னர் அலுவலகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி மனு அளித்தேன். ஆனால் போலீஸ் துறையை அணுகும்படி கவர்னர் அலுவலகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி நான் செய்த விண்ணப்பத்தை கிராண்ட் பஜார் போலீசார் நிராகரித்துவிட்டனர். அதைக் கண்டித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி வீடு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட என்னை போலீசார் கைது செய்தனர் என்று கூறியிருந்தார்.

மேலும் அந்த மனுவில், முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், கவர்னர் வீட்டுக்கு முன்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் 6 நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசாரின் இந்தச் செயல் சட்டவிரோதமானதாகும். எனவே, முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், அரசியலமைப்பு பொறுப்பு வகித்துவரும் முதல்-மந்திரிக்கும் கவர்னருக்கும் மோதல் இருந்தாலும், இந்த வழக்கு அரசியல் நோக்கோடு தொடரப்பட்டுள்ளதால், உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. அரசியல் மோதலை கோர்ட்டுக்கு வெளியே வைத்துக்கொள்ள வேண்டும். கோர்ட்டை அரசியல் களமாக பயன்படுத்தக்கூடாது என்று கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com