தலையில் குண்டு பாய்ந்ததில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தலையில் குண்டு பாய்ந்ததில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
Published on

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகேயுள்ள பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் கடந்த டிசம்பர் 30ந்தேதி அன்று திருச்சி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்து வெளியேறிய ஒரு குண்டு 2 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் குடிசை வீட்டின் முன்பு அமர்ந்திருந்த சிறுவன் புகழேந்தி (வயது11) தலையில் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த சிறுவனுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குண்டு அகற்றப்பட்டது. தொடர்ந்து சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனின் உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த சிறுவன் இன்று திடீரென உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறுவனின் உறவினர்கள் பலர் திரண்டனர். மேலும், முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறியும், உயிரிழந்த சிறுவனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் நீதிவிசாரணை நடத்த வேண்டும் என கூறி அவர்கள் திருச்சி புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சிறுவன் குடும்பம் மிகவும் பின்தங்கிய ஏழ்மையான குடும்பம் என்பதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசிடம் பேசி உரிய நிவாரணம் பெற்று தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.

சிறுவனின் மூளையிலிருந்து இதயத்துக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டதால், சிறுவன் கோமா நிலையில் 3 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த சிறுவன் புகழேந்தி தலையில் குண்டு பாய்ந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோக செய்தி வெளிவந்ததை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை முடிவில் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com