

ஆவூர்,
திருச்சி ராஜா காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பூபதி கண்ணன் (வயது 45). இவர் புதுக்கோட்டைமாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (வேளாண்மை) பணியாற்றி வந்தார். இவரது மனைவி அனுராதா (40). இவர் திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மகள் ஒருவர் உள்ளார்.
பூபதி கண்ணன் தினமும் காலையில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு பணிக்கு சொந்த காரில் செல்வது வழக் கம். பணி முடிந்ததும் மாலையில் வீடு திரும்பிவிடுவார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பூபதி கண்ணன் பணிக்கு சென்றார். மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்களிடம் அனுராதா செல்போன் மூலம் விசாரித்தார். ஆனால் யாரும் அவர் வரவில்லை எனக்கூறி உள்ளனர்.
இந்த நிலையில் திருச்சி அருகே மாத்தூரில் காட்டுப்பகுதியில் நேற்று காலை ஒரு கார் நிற்பதையும், அதன் அருகே ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதையும் அப்பகுதியினர் கண்டனர். இது குறித்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சென்றபோது பிணமாக கிடந்தவர் பூபதி கண்ணன் என அவரது அடையாள அட்டை மூலம் தெரியவந்தது. பூபதி கண்ணனின் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. மேலும் அவர் அணிந்திருந்த பேண்ட் பாதி கழற்றிய நிலையில் இருந்தது. காரின் டிரைவர் இருக்கை பக்க கதவு திறந்து கிடந்தது.
தகவல் அறிந்த அனுராதா தனது உறவினர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தார். அங்கு கணவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு அவர் கதறி அழுதார்.
பூபதி கண்ணன் அணிந்திருந்த மோதிரம் மற்றும் கைக்கெடிகாரம் அப்படியே இருந்தன. இதனால் நகை, பணத்திற்கு இல்லாமல் வேறு காரணத்திற்காக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதினர். கள்ளக்காதல் விவகாரத்தில் பூபதி கண்ணனை மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பூபதி கண்ணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கலெக்டர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த கொலை சம்பவம் குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
பூபதி கண்ணன் பிணமாக கிடந்த இடம் காட்டுப்பகுதியாகும். அவர் அந்த இடத்திற்கு எதற்காக காரில் வந்தார் என்பது சந்தேகமாக உள்ளது. மேலும் கார் நின்றிருந்த இடத்தின் சிறிது தூரத்தில் வைத்து பூபதி கண்ணனை மர்மநபர்கள் வெட்டியிருக்கிறார்கள். அவர் தாக்குதலில் இருந்து தப்பிக்க காரை நிறுத்தியிருந்த பக்கம் ஓடிவந்துள்ளார். அப்போது காரின் கதவை திறந்து தப்பிச்செல்ல முயன்ற போது மர்மநபர்கள் விடாமல் துரத்தி வந்து பூபதி கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
அவரது பேண்ட் பாதி கழன்ற நிலையில் இருந்தது. அவரது செருப்பு தனியாக கிடந்தது. காரில் அவரது ரத்த கரை படிந்திருந்தது. காரில் பெண்கள் அணியும் உள்ளாடை ஒன்றும் கிடந்தது. பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் போது மர்மநபர்கள் அவரை வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என கருதிய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூபதி கண்ணனின் செல்போன் மூலம் போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கினர். இதில் அவர் யாருடன் அதிகம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என விசாரித்தனர். இதில் பெண் ஒருவருடன் அவர் செல்போனில் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அந்த பெண் திருமணமானவர் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூபதி கண்ணனை கொலை செய்ய அரிவாள் மற்றும் கத்திகளை மர்மநபர்கள் பயன்படுத்தி உள்ளனர். 3 நபர்களுக்கு மேல் சேர்ந்து இக்கொலையை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.