புதுக்கோட்டை: பட்டா மாறுதலுக்கு ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

அருளானந்தம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுக்காவில் பேராம்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராம நிர்வாக அலுவலராக ஜான் அருளப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மலம்பட்டியை சேர்ந்த அருளானந்தம் என்பவர் பட்டா மறுதலுக்காக விஏஓ அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, பட்டா மாறுதலுக்கு ரூ. 6 ஆயிரம் லஞ்சம் தருமாறு விஏஓ ஜான் அருளப்பன் கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அருளானந்தம் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி ரசாயனம் தடவிய ரூ. 6 ஆயிரம் பணத்தை இன்று விஏஓவிடம் அருளானந்தம் கொடுத்துள்ளார். அந்த லஞ்ச பணத்தை விஏஓ ஜான் அருளப்பன் வாங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் வாங்கிய விஏஓ அருளப்பனை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து விஏஓ கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






