புதுக்கோட்டையில் போக்சோ வழக்குகள் அதிகம்

திருச்சி சரகத்தில் புதுக்கோட்டையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளன. பாலியல் சம்பவங்களை தடுக்க பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுக்கோட்டையில் போக்சோ வழக்குகள் அதிகம்
Published on

புதுக்கோட்டை:

போக்சோ வழக்குகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போக்சோ வழக்குகள் அதிகம் பதிவாகி வருகின்றது. இதில் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது, சிறுமி கர்ப்பமடைவது, காதலித்து ஏமாற்றி மோசடி செய்வது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக போக்சோ வழக்குகள் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களிலும் பதியப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 5 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 9-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல மாவட்டத்தில் கீரனூர், அறந்தாங்கி, ஆலங்குடி உள்ளிட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களிலும் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் புகார்கள்

திருச்சி சரகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் போக்சோ வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலும் கிராமப்பகுதியில் பள்ளி மாணவிகளும், 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. பாலியல் சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக போலீஸ் வட்டாரத்தினர் கூறியதாவது:- இன்றைய கால கட்டத்தில் பாலியல் சம்பவங்கள் நடைபெறுவதற்கு ஸ்மார்ட் போனும் ஒரு காரணமாகி உள்ளது. இதனை நல்ல முறையில் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இந்த செல்போனை 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள், சிறுவர்கள் பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வு

பள்ளிகளில் மாணவ-மாணவிகளிடம் போக்சோ வழக்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் மாணவ-மாணவிகளிடம் வாழ்வியல் நடைமுறைகளை விளக்கும் வகையில் ஒரு மணி நேரம் தனி வகுப்பு நடத்த வேண்டும். அதில் பாலியல் கல்வி தொடர்பானதை போதித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் செய்ய வேண்டும். பாலியல் குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com