பஸ்சின் மேற்கூரையில் ஏறி மின்வயரை கடித்த வாலிபர்.. பயணிகள் பீதி

சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் பஸ்சின் மேலே நின்று குதிக்கப்போவதாக அவர் மிரட்டியதால், பஸ்சை அங்கிருந்து நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.
பஸ்சின் மேற்கூரையில் ஏறி மின்வயரை கடித்த வாலிபர்.. பயணிகள் பீதி
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு இயக்கப்படும் தனியார் பஸ் நேற்று காலை கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் பஸ் நிறுத்தத்தில் நின்றது. பயணிகள் பஸ்சில் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென பஸ்சின் மேற்கூரையில் ஏறினார்.

இதனால் பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள், அந்த நபரை கீழே இறங்கும்படி கூறினர். ஆனால் அவர் இறங்க மறுத்தார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் பஸ்சின் மேலே நின்று குதிக்கப்போவதாக அவர் மிரட்டியதால், பஸ்சை அங்கிருந்து நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.

திடீரென அந்த வாலிபர் பஸ்சின் மேலே சென்ற மின் வயரை பிடித்து, கடிக்கத் தொடங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகளும் பீதியடைந்தனர். வயரில் மின்சப்ளை இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் உயிர்பிழைத்தார்.

பின்னர் அங்கிருந்த சிலர் பஸ்சில் ஏறி, அந்த வாலிபரை பிடித்து கீழே இறக்கினர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் தஞ்சாவூர் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்த ராமலிங்கம் (வயது 30) என்பதும், சிறிது காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை உறவினர்களிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com