புதுக்கோட்டை: 31 பேர் இணைந்து நடத்திய மொய் விருந்தில் ரூ.15 கோடி வசூல் - ஒருவர் மட்டும் 2.50 கோடி மொய் வைத்து அசத்தல்....!

புதுக்கோட்டையில் 31 பேர் இணைந்து நடத்திய மொய் விருந்தில் ரூ. 15 கோடி வசூல் ஆகியுள்ளது.
புதுக்கோட்டை: 31 பேர் இணைந்து நடத்திய மொய் விருந்தில் ரூ.15 கோடி வசூல் - ஒருவர் மட்டும் 2.50 கோடி மொய் வைத்து அசத்தல்....!
Published on

ஆலங்குடி:

புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்ட எல்லை கிராமங்களில் ஆனி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரையில் பாரம்பரிய நிகழ்வான மொய்விருந்து விழாக்கள் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

கஜா புயல் மற்றும் அதனைத்தொடர்ந்து கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மொய் விருந்து விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. ஆனாலும் பிறந்தநாள் விழா, காதணி விழா என்ற பெயர்களில் மொய் விருந்து நிகழ்ச்சிகள் ஒருபுறம் நடத்தப்பட்ட போதிலும் வழக்கமான உற்சாகம் இன்றி காணப்பட்டது.

களை இழந்து காணப்பட்ட பாரம்பரிய நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஆனி மாதம் இறுதி முதல் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் வெகு விமரிசையாக தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான மொய் விருந்து விழாக்கள் நிறைவடையும் நிலையில் நேற்று முன்தினம் நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து ஒரே இடத்தில் மொய் விருந்து விழா நடத்தினர். இதற்காக முன்கூட்டியே அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

தடபுடல் ஏற்பாடுகளுடன் மொய் விருந்து தொடங்கியது. இந்த விருந்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அசைவ விருந்தை ருசித்தனர். இதன் மூலம் அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.15 கோடி மொய் வசூல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெடுவாசல் கிழக்கு கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் ரூ.2.50 கோடி மொய் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த விழா நடத்தியவர்களில் 20-க்கும் மேற்பட்டோருக்கு தனிப்பட்ட முறையில் தலா ரூ.50 லட்சம் வரை மொய் தொகை வசூல் ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த மொய் விருந்து விழாவை நடத்தியவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நாடே டிஜிட்டல் மயமாக மாறிவரும் சூழ்நிலையில் இந்த விருந்தில் கலந்துகொண்ட கிராமத்தார் முதல் நகரத்தார் வரை ஆன்லைன் மூலமாக பண பரிமாற்றம் செய்தனர்.

இதற்காக வங்கி ஊழியர்கள் தயார் நிலையில் அங்கு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். மேலும் பணம் எண்ணுவதற்கான எந்திரங்களும் அங்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com