பூலித்தேவர் பிறந்தநாள்: அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம்

பூலித்தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை,
சுதந்திரப் போராட்ட வீரர் பூலித் தேவரின் 310-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
“அந்நியர் ஆதிக்க எதிர்ப்பின் பெருமைமிகு தமிழ் அடையாளமான பூலித்தேவரின் பிறந்தநாள். சிப்பாய்ப் புரட்சிக்கும் நூறாண்டுகளுக்கு முன்பே தமிழ்நிலத்தில் புரட்சி வெடித்துவிட்டது! தென்னகம் அந்நியருக்குப் பட்டா போட்டு தரப்படவில்லை எனப் பறைசாற்றும் விதமாகப் போரிட்டு, இந்திய விடுதலைப் போராட்டத்துக்கான தொடக்கவுரை எழுதிய பூலித்தேவரின் புகழ் போற்றுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
“இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, 'வெள்ளையனே வெளியேறு' என்று சுதந்திரத் தீப்பொறி பற்றவைத்துத் தமிழரின் வீரக் கொடியை உயர்த்தி வெற்றிச் சரித்திரம் படைத்த முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்,
“இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியும் நெற்கட்டும் செவலை திறம்பட ஆட்சி செய்த மாமன்னருமான பூலித்தேவரின் பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயர்களுக்கு வரிகட்ட மறுத்து, அவர்களின் ஆதிக்கத்தை அடியோடு அகற்றும் வகையில் தமிழக மக்கள் மத்தியில் சுதந்திர வேள்வியை விதைத்த மாவீரர் பூலித்தேவரின் வீரத்தையும் துணிச்சலையும் அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
“இந்திய சுதந்திரப் போராட்டத்தில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன்முதலில் போர்க்குரல் எழுப்பிய மாவீரர் பூலித்தேவர் பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராக, பல போர்களில் வெற்றி கண்டவர். பத்து ஆண்டுகளாக, ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். வீரத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மாவீரர் பூலித்தேவர் புகழைப் போற்றி வணங்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள பதிவில்,
நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..! பரங்கியரை போரிட்டு விரட்டிய மன்னவன்..! தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் புகழைப்போற்றும் திருநாள் இன்று! ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் அன்னைத்தமிழ் நிலம் அடிமைப்பட்டுகிடந்த பொழுது அதன் விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த வீரர்களில் முதன்மையான பெருமகனார் நம்முடைய பாட்டன் பூலித்தேவன். 'நெற்கட்டான் செவ்வயலில் யாரோ பூலித்தேவனாமே' என ஏளனமாக எண்ணி படையைத்திரட்டி வந்த ஆங்கிலேயர்களை, வெறும் வாளும், வேலும் கொண்ட வீரத்தமிழ் மறவர் படைநடத்தி, களத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு போரிட்டு வென்ற மாவீரன்! எந்த இடத்திலிருந்து ஆங்கிலேயர் படைதிரட்டி வந்தனரோ அதுவரை திருப்பி அடித்து விரட்டிய வீரத்திருமகன் மாமன்னர் பூலித்தேவன்.
அவர் போரிட்டுக் காட்டிய பிறகுதான் பல மன்னர்கள் தாங்களும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட முடியும் என்ற பெருநம்பிக்கை கொண்டனர். பீரங்கி குண்டுகளால் கூடத் துளைக்க முடியாத கோட்டையைக் கட்டி ஆண்ட பேரரசன் பூலித்தேவன் அவர்களின் வீரத்தைப் போற்றுவதில் வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் பெருமிதம் அடைகிறோம். நம்முடைய வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவனின் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவன் நினைவிடத்தில் அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.பி. ராணி ஸ்ரீகுமார், எம்.எல்.ஏ ராஜா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.






