பள்ளியில் சிறுதானிய உணவுகளை காட்சிப்படுத்திய மாணவர்கள்

பள்ளியில் சிறுதானிய உணவுகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.
பள்ளியில் சிறுதானிய உணவுகளை காட்சிப்படுத்திய மாணவர்கள்
Published on

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வானவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறுதானிய விழிப்புணர்வு திருவிழா மற்றும் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை அமுதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், தங்கள் வீடுகளில் இருந்து பல்வேறு சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகளை மாண, மாணவிகள் கொண்டு வந்து கண்காட்சியாக வைத்திருந்தனர். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சிறுதானிய பதார்த்தங்களை செய்து கொண்டு வந்திருந்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ், ராசாத்தி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் ஆகியோர் கண்காட்சி மற்றும் ஊர்வலத்தை பார்வையிட்டு பாராட்டி பேசினர்.

இதில் மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்த சிறுதானிய சூப், கம்பு வடை, கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், கேழ்வரகு புட்டு, முளைகட்டிய பயிறு சுண்டல், நவதானிய பாயாசம் உள்ளிட்டவை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை கவர்ந்தன. மேலும் சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, பயறு வகை உள்ளிட்ட பல்வேறு வகையான தானியங்களை பயன்படுத்தி உணவு தயார் செய்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், கடைகளில் விற்கப்படும் செயற்கை சுவை ஊட்டப்பட்ட தின்பண்டங்களை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவர்கள் நாடகம், கும்மி பாட்டு, வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் வீடுகளில் இருந்து சிறப்பாக சிறுதானிய உணவுகள் கொண்டு வந்து காட்சிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி அனைத்து வீடுகளிலும் சிறுதானிய உணவு வகைகளை பயன்படுத்த வலியுறுத்தியபடி சென்றனர். பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியை ஜீவாஜாய்ஸ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com