புரட்டாசி 2-வது சனிக்கிழமை: தரிசனத்துக்கு குவிந்த பக்தர்கள்

புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
புரட்டாசி 2-வது சனிக்கிழமை: தரிசனத்துக்கு குவிந்த பக்தர்கள்
Published on

சென்னை,

சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் மிகவும் பழமையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.2 கோடி செலவில் புனரமைக்கப் பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கோவிலில் புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையான நேற்று மூலவர் கல்யாண வரதராஜ பெருமாளுக்கு வெண்பட்டாடை உடுத்தி ராஜ அலங்காரம் செய்யப்பட்டு 7 நிறங்களில் விஷேச புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த கோவிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் விதவிதமான மலர்கள், பழங்கள் என மாலை அணிவித்து பெருமாளுக்கு அலங்காரம் செய்வதால் வெளிப்பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையான நேற்று அதிகாலை 4.30 மணிக்கே நடை திறக்கப்பட்டது. இதனால் காலை முதலே சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள்.

சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக குவிந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். காலையிலேயே ஏராளமான பக்தர்கள் வந்ததால் சாலை வரை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவில், வளசரவாக்கம் பெருமாள் கோவில் என அனைத்து பெருமாள் கோவில்களிலுமே பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது..

இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கானப்பட்டது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com