அரசு பள்ளிகளுக்கு ரூ.35 கோடியில் விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

அரசு பள்ளிகளுக்கு ரூ.35 கோடியில் விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
அரசு பள்ளிகளுக்கு ரூ.35 கோடியில் விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று உயர் கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பிறகு, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

தமிழில் மொழி பெயர்ப்பு

திராவிட மொழிகளிலேயே தொன்மைமிக்க மொழியான தமிழின் வரலாறு, பண்பாட்டு மரபு மற்றும் தமிழ் சமூகத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறந்த தமிழ் நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு, ஆங்கிலம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில மொழி பதிப்பகங்களோடு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் கூட்டு வெளியீடுகளாக கொண்டுவரப்படும். பிற திராவிட மொழிகளில் இருந்து சிறந்த நூல்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும்.

உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், பொறியியல், வேதியியல், வேளாண்மை போன்ற துறைகளில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள தலைசிறந்த நூல்களை தமிழில் மொழிபெயர்த்து சம்பந்தப்பட்ட பதிப்பகங்களோடு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் கூட்டு வெளியீடாக ரூ.2 கோடி செலவில் வெளியிடப்படும். இது முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்பு திட்டம் எனும் மாபெரும் திட்டத்தின் தொடக்கமாக அமையும்.

கவிமணி விருது

இளந்தளிர் இலக்கிய திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 100 குழந்தை இலக்கிய நூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்படும். 18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் 3 சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து ரூ.25 ஆயிரம் ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் கவிமணி விருது வழங்கப்படும்.

அனைத்து பள்ளிகளுக்கும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்படும். பள்ளி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 24,266 அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும், ரூ.10 ஆயிரம் வீதம் 6,948 அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கும், ரூ.25 ஆயிரம் வீதம் 6,177 அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் ரூ.35 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

மென்பொருள் உருவாக்கம்

பள்ளிகளில் அவசியமான பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, கல்வி தகவல் மேலாண்மை முறைமை வாயிலாக பெறத்தக்க வகையில் மாற்றியமைக்கப்படும். பள்ளிகளுக்கான அங்கீகாரம் இணைய வழியே ஒளிவு மறைவின்றி பெறத்தக்க வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com