கரும்புக்கான கொள்முதல் விலை தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

கரும்புக்கான கொள்முதல் விலையை எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
கரும்புக்கான கொள்முதல் விலை தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கரும்பு அரவைப் பருவம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் நடப்பாண்டின் கரும்பு கொள்முதல் விலை இன்று வரை அறிவிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகத்தை தமிழக அரசு இழைத்து வருவது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

நடப்பாண்டிற்கான கரும்பு அரவைப் பருவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை கரும்பு கொள்முதல் விலை அறிவிக்கப்படாதது ஏராளமான ஐயங்களை ஏற்படுத்துகிறது.

இத்தனைக்கும் கடந்த ஆண்டு மே மாதமே கரும்பு கொள்முதல் விலையை மத்திய அரசு அறிவித்துவிட்டது. அத்துடன் ஊக்கத்தொகை சேர்த்து அறிவிக்க வேண்டியது தான் மாநில அரசின் வேலை. இதில் எந்த சிக்கலும் இல்லாத நிலையில் கொள்முதல் விலையை பிப்ரவரி மாதம் முடிவடையும் வரை அறிவிக்காமல் தமிழக அரசை தடுக்கும் சக்தி எது?

சுவாமிநாதன் குழு பரிந்துரை

சர்க்கரை ஆலைகளின் நெருக்கடிக்கு பணிந்து, மத்திய அரசின் கொள்முதல் விலைக்கு மேல் ஊக்கத்தொகை அறிவிக்கும் வழக்கத்தையே பினாமி அரசு கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகத்தான் கரும்புக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

சர்க்கரை ஆலை நிர்வாகங்களிடம் இருந்து தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு, உழவர்களின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசின் துரோகத்தை சகித்துக்கொள்ள முடியாது. கரும்புக்கான கொள்முதல் விலையை எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி கணக்கிட்டு தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்ய மறுத்தால் உழவர்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com