புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டி: 60-70 தொகுதிகளில் களமிறங்குவோம்; டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி

புதிய தமிழகம் கட்சி சார்பில் வேட்பாளர் பட்டியல் 29 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டி: 60-70 தொகுதிகளில் களமிறங்குவோம்; டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி
Published on

சென்னை,

புதிய தமிழகம் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஒரு தொகுதியில் போட்டியிட்டது. இதனால், வரும் 23 ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் கிருஷ்ணசாமி தனித்து களமிறங்க முடிவு செய்துள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்படவில்லை. குறிப்பாக அதிமுக கூட்டணியில் 15 தொகுதிகள் வரையும் ஒரு ராஜ்யசபா இடங்களும் கிருஷ்ணசாமி கேட்டதாக கூறப்பட்டது. இதனை ஏற்க அதிமுக மறுத்த நிலையில் கிருஷ்ணசாமி தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும் எனவும் 60-70 தொகுதிகளில் தனித்து போட்டியிட இருப்பதாகவும் கிருஷ்ண்சாமி கூறியுள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பேராதரவுடன் இயங்கும் புதிய தமிழகம் கட்சிக்கு உரிய அரசியல் அங்கீகாரம் அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளச் சூழலில், இத்தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் தலைவர் கிருஷ்ணசாமியின் கரத்தை வலுப்படுத்துவதும், நம் மக்கள் ஒன்றுபட்டு நிற்பதும் நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்பதும் மட்டுமே "உண்மையான அரசியல் வெற்றி' என்பதை நிலைநாட்டும் பொருட்டு, புதிய தமிழகம் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வேட்பாளர் தேர்வு நேர்காணலில் கலந்துகொண்டனர். புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ள 120 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள 60 முதல் 70 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு; அத்தொகுதிகளில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களின் பட்டியலை 29-ஆம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கிருஷ்ணசாமி வெளியிட உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com