

செங்குன்றம்,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக முக்கியமானது புழல் ஏரி ஆகும். இதன்மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரி முற்றிலுமாக வறண்டுவிட்டது. கடந்த ஆண்டு பெய்த மழையால் புழல் ஏரிக்கு தண்ணீர் வரத்து தொடங்கியது.
இதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கனஅடி ஆகும். நேற்றைய நிலவரப்படி இந்த ஏரியில் 310 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து லிங்க் கால்வாய் மூலம் வினாடிக்கு 240 கனஅடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும் புழல் ஏரிக்கு வந்து கொண்டிருப்பதால் புழல் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கடந்த மாதம் 16-ந் தேதி புழல் ஏரியின் நீர்மட்டம் 1,263 மில்லியன் கனஅடியாக இருந்தது. நேற்றைய நிலவரப்படி புழல் ஏரியின் நீர்மட்டம் 1,366 மில்லியன் கனஅடியாக பதிவானது. சென்னை குடிநீருக்காக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 84 கனஅடி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.