

சென்னை,
சென்னை கொடுங்கையூரில், மகனுக்கு அரசு உதவித்தொகை வந்துள்ளதாக கூறி ஊறுகாய் வியாபாரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் முழுவதையும் நூதன முறையில் மோசடி கும்பல் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூரைச் சேர்ந்த ஊறுகாய் வியாபாரி முத்துக்காமாட்சியின் மகன் தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில், மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு அரசு உதவித்தொகையாக ரூ.48 ஆயிரம் வழங்கப்படுவதாக கூறியுள்ளார். அந்த தொகையைப் பெற உங்கள் செல்போனுக்கு வரும் கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்யுங்கள் என்றும் அந்த நபர் கூறியிருக்கிறார்.
அவர் கூறியபடி முத்துக்காமாட்சியின் செல்போனுக்கு ஒரு கியூ.ஆர். கோடு வந்த நிலையில், அதை அவர் ஸ்கேன் செய்துள்ளார். இதையடுத்து சில வினாடிகளில் அவரது வங்கிக் கணக்கில் இருந்த 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.