மனைவியுடன் சண்டை: கோவில்பட்டியில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

துபாயில் உள்ள மனைவியுடன் தூத்துக்குடியில் உள்ள கணவன் வீடியோ காலில் பேசியபோது சண்டை போட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எஸ்.எஸ். நகரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சுரேஷ் (வயது 35). இவரது மனைவி காயத்ரி துபாயில் வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை 2 மணியளவில் சுரேஷ் அவரது மனைவி காயத்ரியுடன் வீடியோ காலில் பேசியுள்ளார்.
அப்போது மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு நான் சாகப் போகிறேன் என்று சொல்லிவிட்டு போனை ஆப் செய்து விட்டாராம். கணவர் ஃபோனை கட் செய்ததும் பதறிதுடித்த காயத்ரி தனது உறவினரான வினோத் என்பவருக்கு போன் செய்து நேரில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து வினோத் அங்கு சென்று பார்த்தபோது சுரேஷ் தூக்கிட்டு பிணமாக தொங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






