ஆங்கிலேயர்களை அலறவிட்ட ராணி வேலுநாச்சியார்... இழந்த கோட்டையை மீட்டெடுத்த வரலாறு..!

இந்தியாவில் விடுதலைக்காக போராடிய முதல் அரசி வேலுநாச்சியார் ஆவார்.
ஆங்கிலேயர்களை அலறவிட்ட ராணி வேலுநாச்சியார்... இழந்த கோட்டையை மீட்டெடுத்த வரலாறு..!
Published on

வீரமங்கை ராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியை ஆண்ட அரசி ஆவார். ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார். இவரே இந்தியாவில் விடுதலைக்காக போராடிய முதல் அரசி ஆவார்.

1730-ஆம் ஆண்டு, வேலுநாச்சியார் இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே மகளாகப் பிறந்தார். ஆண் வாரிசு இல்லாததால் ஆண் போல வளர்க்கப்பட்டார். குதிரை சவாரி, வில்வித்தை, வளரி மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டார். பல மொழிகள் கற்றார். 1746-இல் சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்.

1772-ஆம் ஆண்டு ஆற்காடு நவாப், ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து சிவகங்கையைத் தாக்கி 'காளையார் கோவில் போரில்' வேலு நாச்சியாரின் கணவரைக் கொன்றார். தாக்குதலின் போது ராணி வேலு நாச்சியாரும் அவரது மகளும் அருகில் உள்ள கோவிலில் இருந்ததால் உயிர் தப்பினர். வீரத்துடன் கூடவே விசுவாசமும் நிறைந்த மருது சகோதரர்களான பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகிய இருவரும் அவர்களை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். வேலு நாச்சியாரால் தன் கணவரின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை.

உருது மொழித்திறமை

சிவகங்கையை இழந்த பின்னர் வேலு நாச்சியார் தனது இளம் மகள் வெள்ளச்சியுடன் ஹைதர் அலியை சந்தித்தார். இந்தப் படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் விருப்பாட்சியில் தங்கி ஹைதர்அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் பற்றி விளக்கிப் பேசினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு வியந்த ஹைதர் அலி உதவிகள் செய்வதாக உறுதியளித்தார்.

ஹைதர் அலிக்கு கடிதம்

8.12.1772 அன்று, சிவகங்கை பிரதானி தாண்டவராயர், ராணி வேலு நாச்சியாருக்காக ஹைதர்அலிக்கு அனுப்பிய கடிதத்தில், "ஆற்காடு நவாப், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இரு தன்னரசுகளையும் ஆக்கிரமித்து அழிவை ஏற்படுத்தி வருகிறார். அங்கிருந்து தப்பி வந்த நான் கள்ளர் தலைவர்களுடன் காடுகளில் தங்கி கிளர்ச்சியைத் தொடர்ந்து வருகிறேன். இந்த முயற்சியில் எனக்கு யார் உதவி செய்தாலும், இன்னும் சிறந்த சாதனைகளை இயற்ற முடியும். ஆகையால், தாங்கள் ஐயாயிரம் குதிரை வீரர்களையும் போர் வீரர்களையும் அனுப்பி வைத்தால், அவர்களது படிச் செலவை நான் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் இணைந்து இந்த இரு தன்னரசுகளையும் மீண்டும் கைப்பற்ற இயலும். அத்துடன், மதுரைக்கும் படைகளை அனுப்பி வைத்து அந்தச் சீமை முழுவதும் எதிர் நடவடிக்கைகளைத் தொடங்கி வைக்கவும் இயலும். அங்குள்ள பாளையக்காரர்களும் நமக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

எதிர்ப்புப்படை

எட்டு ஆண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். மருது சகோதரர்களின் பெரும் முயற்சியினால் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி ஓர் எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்களே இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.

உடையாள்

சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் கொல்லப்பட்டபோது, ராணி வேலு நாச்சியார் தப்பிச் சென்றார். அப்போது அரியாகுறிச்சி என்னுமிடத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி உடையாளிடம் வேலு நாச்சியார் சென்ற வழியை ஆங்கிலேயப் படைகள் கேட்டபோது, அவர் அதனைத் தெரிவிக்க மறுத்தார். இதனால் ஆங்கிலேயர்கள் அவளைத் தலை வேறு முண்டம் வேறாக வெட்டிப் படுகொலை செய்தனர். தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நாட்டுக்காக உயிர்நீத்த உடையாளின் வீரத்தைப் போற்றிய வேலு நாச்சியார், தனது மகளிர் படைக்கு 'உடையாள் படை' என்று பெயர் சூட்டினார். இப்படையின் தலைவியாகக் குயிலி நியமிக்கப்பட்டார்.

சிவகங்கை மீட்பு

உடையாளின் தியாகத்தின் நினைவாக, ராணி வேலுநாச்சியார் அவர் பெயரில் ஒரு மகளிர் படையை உருவாக்கினார். இந்த படையின் தளபதி குயிலி, கோட்டைக் கதவுகளைத் திறக்க ஒரு திட்டத்தை முன்வைத்தார். விஜயதசமி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. அருகில் உள்ள ஊர் பெண்கள் அனைவரும் கோவிலுக்கு செல்வார்கள். அவர்களுடன் கலந்து நாங்களும் உள்ளே செல்கிறோம். நான் ஆயுதங்களை மறைத்து வைத்தபடி உடையாள் படையின் சிறிய பிரிவுக்கு தலைமையேற்று கோட்டைக்குள் நுழைவேன். பிறகு நாங்கள் கோட்டையின் கதவை உங்களுக்காக திறந்துவிடுகிறோம் என்று குயிலி சொன்னார். 1780- ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஐதர் அலி 5000 குதிரை வீரர்களையும் போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். எட்டு ஆண்டுகளுக்கு பின் சிவகங்கையை வேலுநாச்சியார் கைப்பற்றினார்.

நினைவு மண்டபம்

பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார். 18 ஜுலை 2014 அன்று, சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வீர மங்கை வேலு நாச்சியார் நினைவு மண்டபத்தை, அன்றைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். வேலு நாச்சியார் பயன்படுத்திய ஈட்டி, வாள் முதலான பல பொருட்கள் சிவகங்கையில் அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. இந்திய அரசு, ராணி வேலு நாச்சியார் நினைவாக, 31 டிசம்பர் 2008 அன்று அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டது.

குயிலி

ராணி வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழியாகவும் மெய்க்காப்பாளராகவும் இருந்தார். குயிலியின் வீரத்தைப் பாராட்டி, வேலுநாச்சியார் அவரை பெண்களுக்கான 'உடையாள் படை'யின் தலைவியாக நியமித்தார். ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிய வேலுநாச்சியாரின் படைக்கு, கோட்டைக்குள் இருக்கும் ஆயுதக் கிடங்கை அழிப்பது மட்டுமே ஒரே வழியாகத் தெரிந்தது. விஜயதசமி திருவிழாவின் போது, பெண்கள் மட்டுமே கோட்டைக்குள் இருக்கும் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதைப் பயன்படுத்திக்கொண்ட குயிலி, தனது படையினருடன் கோட்டைக்குள் நுழைந்தார்.

கோட்டைக்குள் நுழைந்ததும், ஆங்கிலேயர் படை குவித்து வைத்திருந்த ஆயுதக் கிடங்கை குயிலி கண்டறிந்தார். ஆங்கிலேயர்களின் ஆயுதங்களை அழிக்கத் திட்டமிட்ட குயிலி, தன் உடல் முழுவதும் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றிக்கொண்டு, எரியும் விளக்குடன் ஆயுதக் கிடங்குக்குள் குதித்தார். குயிலியின் இந்த தியாகத்தால் ஆயுதக் கிடங்கு முழுமையாக வெடித்துச் சிதறியது. குயிலியின் இந்த தியாகத்தை அடிப்படையாகக் கொண்டு, சிவகங்கை மாவட்டம் சூரக்குளத்தில் தமிழக அரசு இவருக்கு மணிமண்டபம் மற்றும் நினைவுச் சின்னம் அமைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com