

சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
மேயர் ஆர்.பிரியா, இன்று (27.02.2026) சென்னை பள்ளிகளில் 2026-27ஆம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கையினை அதிகரிக்கும் வகையில் தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-44க்குட்பட்ட வியாசர்பாடி, நியூ காமராஜ் நகர் சென்னை நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே சென்னை பள்ளிகளின் சிறப்பினை எடுத்துரைக்கும் விதமாக “மாணவர் சேர்க்கை பிரசாரத்திற்கான” ஆட்டோக்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்து, பெற்றோர்களுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பாக விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 35 மேல்நிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 206 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 417 சென்னை பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 336 மழலையர் வகுப்புகளும் அடங்கும். இந்த 417 சென்னை பள்ளிகளில் 1,13,398 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
417 சென்னை பள்ளிகளிலும் சிறப்பான கட்டுமான வசதிகளுடன் இங்கு பயிலும் அனைத்து மாணவர்களும் பயனடையும் விதமாக பல்வேறு வகையான நலத்திட்டங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மழலையர் பிரிவில் காற்றோட்டமான வகுப்பறைகள், பச்சை வண்ணப் பலகைகள், ஸ்மார்ட் பலகைகள், விளையாட்டுடன் கல்வியில் ஆர்வத்தினை தூண்டக்கூடிய வண்ணமயமான எல்.கே.ஜி./யூ.கே.ஜி. புத்தகங்கள், புத்தகப் பைகள், காலணிகள், அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது.
மேலும், சென்னை பள்ளிகளில் தூய்மையான குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள், நவீன ஆய்வகங்கள், நவீனமயமாக்கப்பட்ட பலவிதமான பள்ளி விளையாட்டுத்திடல்கள் போன்ற பல்வேறு வசதிகளுடன் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகள், எழுதுப்பொருட்கள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், காலைச் சிற்றுண்டி, பள்ளிக்கு 100 சதவீதம் வருகைபுரியும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, மேல்நிலைக் கல்வியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டியுடன் கூடிய மாலை நேர சிறப்பு வகுப்புகள், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, மேல்நிலைக் கல்வி முடித்து மேற்படிப்பு பயில ஊக்கத்தொகை, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு விளையாட்டுப் பயிற்சிகள், தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கான பயிற்சி, சாரண/சாரணியர் இயக்கம், கணினிப் பயிற்சிகள், தையற்பயிற்சி, தற்காப்புக் கலைகளான குத்துச்சண்டை, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகள் பள்ளிகளிலேயே கற்பிக்கப்படுகிறது. மேலும் கல்வி மட்டுமில்லாமல் மாணவர்களுக்கு அனுபவ அறிவு வழங்கும் வகையில் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
கடந்த கல்வியாண்டில் (2025-2026) இதே போல் மாணவர் சேர்க்கை பிரசாரம் மூலம் 22,624 மாணவர்கள் புதிதாக மற்ற பள்ளிகளிலிருந்து சென்னை பள்ளிகளில் சேர்ந்தனர். அதுபோலவே. இந்த கல்வியாண்டிலும் (2026-2027) சென்னை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், பொதுமக்களிடையே சென்னைப் பள்ளிகளின் சிறப்பினை எடுத்துரைக்கும் விதமாக "மாணவர் சேர்க்கை பிரசாரம்" (Admission Propaganda) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு பிரசாரத்தினை மேயர் இன்று வியாசர்பாடி, நியூ காமராஜ் நகரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில், 39 பதிவு செய்யப்பட்ட ஒலிப்பெருக்கியுடன் கூடிய 10 ஆட்டோக்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பிரசாரத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மாணாக்கர் சேர்க்கை பிரசாரமானது மண்டலத்திற்கு 3 பிரசார ஆட்டோக்கள் வீதம் 15 மண்டலத்திற்கும் என மொத்தம் 45 ஆட்டோக்களின் மூலம் பிப்ரவரி-27 முதல் ஏப்ரல்-27 வரை 2 மாதங்களுக்கு வாரத்தில் அனைத்து நாட்களுக்கும் மேற்கொள்ளப்படும்.
இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு மேயர் அவர்களின்2025-26ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உலகளாவிய பொது அறிவினை பெறும் வகையிலும் செய்தித்தாள் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்களிடையே செய்தித்தாள்களில் வரும் செய்திகள் குறித்த வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மேயர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
சென்னை நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரால் தமிழ், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களின் ஆசிரியர்களை கொண்ட ஒரு குழு மூலம் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, முதற்கட்டமாக செய்தித்தாள்களில் வரும் செய்திகள் குறித்து வாராந்திர வினாடி வினாப் போட்டிகள் ஒவ்வொரு மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் 28 வாரங்கள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் மண்டல அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 300/- மற்றும் இரண்டாம் பரிசாக ரூபாய் 200/- என 70 மாணவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.50,609/- வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டமாக மண்டல அளவில் வெற்றி பெற்ற 70 மாணவ / மாணவியர்களுக்கு அரையிறுதிப்போட்டி நடத்தப்பட்டு, அதில் 18 மாணவ / மாணவியர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு 09.01.2026 அன்று சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுங்கம்பாக்கத்தில் 9 பேர் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற இரண்டு குழுக்களை சேர்ந்த 18 மாணவர்களுக்கு இன்று பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, நிலைக்குழுத் தலைவர்கள் பாலவாக்கம் திரு.த.விசுவநாதன் (கல்வி), திருமதி சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரிவிதிப்பு (ம) நிதி), கல்வி அலுவலர் திருமதி ஜெ.வசந்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.