

சென்னை,
சென்னை உயர் நீதிமன்றத்தில் பக்ரீத் பண்டிகை மற்றும் விலங்கு வதை தடுப்பு தொடர்பான வழக்கில், தமிழக காவல்துறை தாக்கல் செய்துள்ள செயல்பாட்டு அறிக்கை (Compliance Report) மற்றும் அதன் தொடர்ச்சியாக வழக்கு முடிக்கப்பட்ட விதம் ஆகியவை, தற்போதைய தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், சிறுபான்மையின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நிலவும் மெத்தனப் போக்கையுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட இந்த அரசு தவறிவிட்டதோ என்ற நியாயமான சந்தேகம் இதன் மூலம் எழுகிறது என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது வேறு எந்த நாட்களிலோ தமிழகத்திற்குள் பசு, எருது, காளை அல்லது கன்றுகள் வதைக்கப்படுவதில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்களைத் (Slaughterhouse) தவிர, வேறு எந்தப் பொது இடங்களிலும் விலங்குகளை வதைக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள செயல்பாட்டு அறிக்கையில்; சிறப்புப் படைகள் குவிப்பு, உளவுத்துறை கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்துப் பணிகள் மூலம் நீதிமன்ற உத்தரவு கண்காணிக்கப்பட்டதாகவும், விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஒருபுறம் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று முன்தினம்தான் ஊடகங்கள் வாயிலாக உறுதி அளித்தார். ஆனால், அதற்குள்ளாகவே தமிழக காவல்துறை நீதிமன்றத்தில் செயல்பாட்டு அறிக்கையைத் தாக்கல் செய்து, வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அரசாங்கத்தின் கொள்கை முடிவிற்கும், காவல்துறையின் செயல்பாட்டிற்கும் இடையே எந்தவொரு ஒருங்கிணைப்பும் இல்லையா? அல்லது உரிய நேரத்தில் மேல்முறையீடு செய்யாமல், சிறுபான்மையின மக்களை ஏமாற்றுவதற்காகவே அமைச்சர் அவ்வாறு வெற்று அறிக்கை விட்டாரா? என்கிற பலத்த கேள்வி தற்போது எழுகிறது.
ஒரு ஜனநாயக மற்றும் மக்கள் நல அரசின் முதன்மைக் கடமை என்பது, இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதாகும். குறிப்பாக, அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியுள்ள மத சுதந்திரம் மற்றும் குடிமக்களின் உணவு உரிமைகளைப் பாதுகாப்பதில் தற்போதைய அரசு அசாத்திய வேகத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும்.
போதிய உள்கட்டமைப்புடன் கூடிய இறைச்சிக் கூடங்கள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இல்லாத சூழலில், பல நூற்றாண்டுகளாக நடைபெறும் குர்பானி பலியிடலுக்கு எதிரான இத்தகைய உத்தரவு மக்களின் இயல்பு வாழ்வையும், மத வழிபாட்டுச் சுதந்திரத்தையும் பெருமளவில் பாதிக்கும் என்பதை அரசு நீதிமன்றத்திற்குச் சட்ட ரீதியாக விளக்கத் தவறிவிட்டது என்றே கருத வேண்டியுள்ளது.
மேலும், இந்த விவகாரம் ஏதோ ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு அல்லது பக்ரீத் பண்டிகைக்கு மட்டும் எதிரானது அல்ல. தமிழகத்தில் தொன்றுதொட்டு வாழும் பல்வேறு சமூக மக்களிடமும் நிலவி வரும் 'விலங்கு பலியிடுதல்' மற்றும் 'நேர்த்திக்கடன் செலுத்துதல்' என்ற வாழ்வியல் மற்றும் வழிபாட்டு நம்பிக்கை சார்ந்தது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'விலங்கு பலியிடுதல் தடைச் சட்டம்', மக்களின் கடுமையான ஜனநாயக ரீதியான எதிர்ப்பு காரணமாகப் பின்னர் திரும்பப் பெறப்பட்டது. தற்போதைய நீதிமன்ற உத்தரவை அரசு கையாண்ட விதத்தைப் பார்க்கும்போது, அதே போன்றதொரு தடைச் சட்டம் மறைமுகமாகத் தமிழகத்தில் திணிக்கப்படுகிறதோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புடனும் செயல்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதோடு, நீதிமன்ற நடைமுறைகளுக்கு உட்பட்டு, மக்களின் பாரம்பரிய மத மற்றும் உணவு உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், தேவையான சட்டப்பூர்வ திருத்தங்களையோ அல்லது புதிய அரசாணையையோ தமிழக அரசு உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும்.
சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட இந்த அரசு தார்மீகப் பொறுப்பேற்று அடுத்தகட்ட சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.