

சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா 2-வது அலை தனது கடுமையான தாக்கத்தால் மக்களை பரிதாபகரமான நிலைக்கு தள்ளியுள்ளது. கொடிய நோய்த் தொற்றில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் பாதுகாப்பதற்கான ஒரே தீர்வாக நம் கண் முன் இருப்பது தடுப்பூசி மட்டுமே. தமிழக அரசு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும். குறிப்பாக, தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தடுப்பூசி வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதால் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். அனைத்து தரப்பினருக்கும் எளிதில் தடுப்பூசி கிடைப்பதற்கு ஏதுவாக தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் தடுப்பூசிகளை வழங்க அரசு உத்தரவிட்டால் காலதாமதமின்றி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறுவார்கள்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று பரவலால் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில், அக்டோபரில் 3-வது அலை வரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, பெரிய தொழில், சிறிய தொழில் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான பொருளாதார திட்டத்தை முதல்-அமைச்சர் வகுக்க வேண்டும். சவரத்தொழில், அழகுநிலையம், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற அமைப்புசாரா தொழில்களுக்கும், தினக்கூலிகளுக்கும் உரிய நிவாரண உதவி செய்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.