ராதாபுரம் யூனியன் கூட்டம்

ராதாபுரம் யூனியன் கூட்டம் நடந்தது.
ராதாபுரம் யூனியன் கூட்டம்
Published on

ராதாபுரம்:

ராதாபுரம் யூனியன் பகுதிகளில் போதிய பருவமழை பெய்யாததால் தற்போது கடுமையான வறட்சி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். ராதாபுரம் யூனியன் தலைவர் சவுமியா ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். நெல்லை திட்ட இயக்குனர் சுரேஷ், துணை இயக்குனர் (பஞ்சாயத்து) விமலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புளோரன்ஸ் விமலா, நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் பிரதிநிதிகளின் விளக்கங்களை கேட்டறிந்தனர்.

கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பேசுகையில், ''ராதாபுரம் யூனியன் மழைமறைவு பிரதேசத்தில் இருப்பதால் மிகவும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை குறைவு மற்றும் போதிய நீர் ஆதாரம் இல்லாததால், தற்போது குடிநீர் பிரச்சினை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கடினமான சூழலில் உள்ளனர். எனவே ராதாபுரம் யூனியன் பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், போர்க்கால அடிப்படையில் 50 புதிய ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் பைப்லைன் அமைக்க வேண்டும்'' என்று கூறினார்.

திட்ட இயக்குனர் சுரேஷ் பேசுகையில், ''ராதாபுரம் யூனியன் பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசின் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது'' என்றார். மேலும் மக்கள் பிரதிநிதிகளுக்கு குடிநீர் மற்றும் மின்கட்டணம் குறைப்பதை குறித்து ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், பஞ்சாயத்து தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், ராதிகா சரவணகுமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com