மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாததால் ஆத்திரம்: பட்டா கத்தியால் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; 3 பேர் கைது

காஞ்சீபுரத்தில் அரசு பஸ்சை வழிமறித்து கண்ணாடியை பட்டா கத்தியால் உடைத்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாததால் ஆத்திரம்: பட்டா கத்தியால் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; 3 பேர் கைது
Published on

பஸ் கண்ணாடி உடைப்பு

காஞ்சீபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் கண்ணன் தாங்கல் கிராமத்தை நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் பின்னால் 3 வாலிபர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு பின் தொடர்ந்து வந்தனர். அப்போது அவர்கள் 'ஹாரன்' அடித்தவாறு பஸ்சை முந்தி செல்ல முயன்றனர். ஆனால் பஸ் டிரைவர் வழிவிடாமல் தொடர்ந்து பஸ்சை ஓட்டிச்சென்றார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் பஸ்சை வழிமறித்து மடக்கிய நிலையில், ஹாரன் அடித்தால் வழிவிட முடியாதா? என டிரைவரிடம் தகராறு செய்து பட்டாக்கத்தியை கொண்டு பஸ்சின் முன் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினர். இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து சிவ காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

எலும்பு முறிந்தது

கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த பதிவுகளில் குற்றவாளியின் அடையாளத்தை கொண்டு அது சரித்திர பதிவேடு குற்றவாளி தாமல்வார் தெருவைச் சேர்ந்த சரவணன் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, காஞ்சீபுரம் கோனேரிக்குப்பம் அருகே அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில். போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சரவணன் (28) போலீசாரை கண்டதும், ரெயில் தண்டவாளத்தில் இறங்கி ஓட்டம் பிடிக்க போலீசாரும் பின்தொடர்ந்து ஓடினர். இதில் சரவணன் தடுக்கி விழுந்ததில் கையில் எலும்பு முறிந்தது.

3 பேர் கைது

இதனையடுத்து அவருக்கு காஞ்சீபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டது. இதனையெடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சம்பவத்தில் உடந்தையாக இருந்த அப்பகுதியில் பதுங்கி இருந்த அவரது கூட்டாளிகளான காஞ்சீபுரம் பெருமாள் தெருவைச் சேர்ந்த சிவா (25), காமராஜர் நகரை சேர்ந்த மற்றொரு சரவணண் (22)ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com