

புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
குதிரைபேர அரசியலுக்கு எடுத்துக்காட்டு ஒவ்வொரு எம்.எல்.ஏவும் தவெகவுக்கு தாவுவதுதான். திமுக எப்போதுமே குதிரை பேரத்துக்கு எதிரானதுதான். ஜனநாயகத்தை நாங்கள் நம்புகிறோம்.
குதிரை பேரத்தில் ஈடுபட்டிருந்தால், கூட்டணி கட்சிகளை ஆதரிக்க சொல்லியிருக்க மாட்டோம். முதல்-அமைச்சர் கரூர் செல்லும் முன் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்பதே தவெக அரசின் நோக்கம். எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யவைத்து குதிரை பேரம் நடப்பது குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும்.
குளம் வற்றி போனால் பறவைகள் அடுத்த குளத்தை தேடி செல்வது வழக்கம். தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க கூட்டணி கட்சியினரை நாங்கள் ஏன் அனுப்பி வைக்க வேண்டும். தவெக ஆட்சியை கவிழக்க மாட்டோம். மக்களை சந்தித்துதான் ஆட்சிக்கு வருவோம்.
திமுக குதிரை பேரம் செய்திருந்தால் 2017-ம் ஆண்டிலேயே ஆட்சிக்கு வந்திருக்க முடியும். சின்ன பிள்ளைகளுக்கு மிட்டாயை காட்டி ஏமாற்றி ஆட்சிக்கு வருவது எங்கள் வழக்கமல்ல என்றார்.