சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் நடந்த ராகு-கேது பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Published on

குடவாசல்:

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் நடந்த ராகு-கேது பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேஷபுரீஸ்வரர் கோவில்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்புரத்தில் சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராகுவும், கேதுவும் ஏக சரீரமாக இருந்து இறைவனை பூஜித்து அருள் பெற்றதால் ராகு- கேது இத்தலம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்கு பாம்புபுரம் மற்றும் தென் காளகஸ்தி என்ற பெயரும் உண்டு. 1 ஆண்டுக்கு ஒரு முறை ராகுபகவான் மற்றும் கேதுபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெறும்.

ராகு-கேது பெயர்ச்சி விழா

இந்த ராகு-கேது பெயர்ச்சி விழா திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு நேற்று மதியம் 3.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர்.

இதை தொடர்ந்து சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பகவானுக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பரிகார பூஜை

இதில் கலெக்டர் சாருஸ்ரீ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, காமராஜ் எம்.எல்.ஏ., குடவாசல் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதிராமன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு நடந்த பரிகார பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு வெள்ளியிலான நாகத்திற்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

விழாவில் பாதுகாப்பு பணியில் நன்னிலம் போலீசார் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com