

சென்னை,
இந்திய கல்வி முறையில் நடைபெறும் முறைகேடுகள், நீட் உள்ளிட்ட தேர்வுத்தாள் கசிவுகள், கல்விக் கட்டண உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை திரட்டி நாடாளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி 'மாணவர்களின் குரல்' என்ற நிகழ்ச்சி வாயிலாக அவர்களிடம் பேசி வருகிறார். அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தொடங்கி, மராட்டிய மாநிலம் புனே மற்றும் நாசிக் நகரங்கள், மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூர் போன்ற இடங்களில் மாணவர்கள் குரல்' நிகழ்ச்சி நடத்திய ராகுல்காந்தி, இன்று சென்னையில் உள்ள தீவுத் திடலில் மாணவர்கள் முன்னிலையில் பேச இருக்கிறார்.
மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள முதல்-அமைச்சர் விஜய் வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு ராகுல் காந்திக்கு விஜய் மதிய உணவு விருந்து அளிக்க உள்ளார். பின்னர் இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனையின் போது, தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது. ராகுலும் விஜய்யும் தனியாக சந்தித்து பேசவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.