த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி

மக்களின் தீர்ப்பு இளைஞர்களின் எழுச்சிமிக்க குரலை பிரதிபலிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி
Published on

சென்னை,

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.

அதில் 4 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 885 வாக்குகள் ஈ.வி.எம். எந்திரம் மூலமாகவும், தபால் வாக்குகளாக 5 லட்சத்து 80 ஆயிரத்து 384-ம் பதிவாகி இருந்தன. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது வரை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட த.வெ.க. தலைவர் விஜய், 2 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி த.வெ.க. தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“நான் விஜய் அவர்களிடம் பேசி, த.வெ.க.வின் இந்த அற்புதமான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். மக்கள் வழங்கிய இந்த தீர்ப்பு, புறக்கணிக்க முடியாத, புறக்கணிக்கப்படக் கூடாத இளைஞர்களின் எழுச்சிமிக்க குரலை பிரதிபலிக்கிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்புக்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். காங்கிரஸ் கட்சி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களின் பாதுகாப்பிற்காகவும் சேவைக்காகவும் தொடர்ந்து பாடுபடும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com