

நெல்லை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் 3-வது கட்டமாக 3 நாள் பிரசாரத்தை தென் மாவட்டங்களில் தொடங்கினார்.
இதற்காக விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு நேற்று காலை வந்தார். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்றைய தினம் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வக்கீல்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் ராகுல்காந்தி கலந்து கொண்டு, வக்கீல்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து அவர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே திரண்டிருந்த பொதுமக்களிடமும், முத்தையாபுரத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் இடையேயும் பேசினார். தூத்துக்குடியில் பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி, பின்னர் மாலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இதனை தொடர்ந்து இன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பேராசிரியர்களுடன் நடந்த கலந்துரையாரல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர், கல்வி முறைக்கு ஒரு கொள்கையை நாம் உருவாக்க வேண்டும் என்றால், அது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடனான உரையாடலிலிருந்து வர வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இது செய்யப்படவில்லை.
கல்வி என்பது பொருளாதார ரீதியில் வலுவானவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று நான் நம்பவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, கல்விக்கான உதவித்தொகை வழங்குவதை அதிகப்படுத்துவோம் என்று அவர் பேசினார்.