தமிழ் மொழி மீது ராகுல் காந்தி மரியாதை கொண்டுள்ளார் - செல்வப்பெருந்தகை

தமிழில் ராகுல் காந்தி தெரிவித்த பொங்கல் வாழ்த்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வந்துள்ளார். தனியார் பள்ளியில் நடைபெறும் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ராகுல் காந்தி அந்த பள்ளிக்கு அருகே காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழாவிலும் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், தமிழ் மொழி மீது ராகுல் காந்தி மரியாதை கொண்டுள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
இன்று தமிழ்நாடு, நீலகிரி மாவட்டம், கூடலூர் செயின்ட் தாமஸ் ஆங்கில உயர் பள்ளியின் பொன்விழா ஆண்டு விழாவில் பங்கேற்ற இந்திய திருநாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு மக்களுக்கு தமிழிலேயே “இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.
தமிழ் மொழி, தமிழ்ப் பண்பு, தமிழர் பண்பாட்டின் மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதையையும், தமிழக மக்களுடன் உள்ள உறுதியான நேசத்தையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழில் அவர் தெரிவித்த இந்த பொங்கல் வாழ்த்து, நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் பெரும் மகிழ்ச்சியிலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
மக்கள் மொழியையும் பண்பாட்டையும் மதித்து உரையாடும் அவரது அணுகுமுறை, தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் நம்பிக்கையையும் பாசத்தையும் மேலும் உறுதிப்படுத்தியது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






