

சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலையுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் பொன்னேரி, சோளிங்கர், துறையூர் ஆகிய தொகுதிகளில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, 2-வது நாளாக இன்று (திங்கட்கிழமை) பிரசாரம் மேற்கொள்ள மீண்டும் தமிழகம் வருகிறார்.
அதன்படி, தமிழகத்தில், குளச்சல், நாங்குநேரி, ஸ்ரீவைகுண் டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரிக்க உள்ளார். இதற்காக இன்று காலை 7.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் ராகுல்காந்தி, காலை 10.45 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வருகிறார்.
அங்கிருந்து காலை 11 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 11.20 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் வந்தடைகிறார். குளச்சலில் காலை 11.30 முதல் நண்பகல் 12.15 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து குளச்சலில் இருந்து நண்பகல் 12.25 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு நண்பகல் 12.50 மணிக்கு நெல்லை மாவட்டம் நாங்குநேரி செல்கிறார். அங்கு மதியம் 1 மணி முதல் 1.45 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.
பின்னர் நாங்குநேரியில் இருந்து மதியம் 1.55 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சென்றடைகிறார். ஸ்ரீவைகுண்டத்தில் பிற்பகல் 2.25 மணி முதல் 3.10 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.
அதைத்தொடர்ந்து பிற்பகல் 3.20 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிற்பகல் 3.35 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து பிற்பகல் 3.50 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். தமிழகத்தில் 2 நாட்கள் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பங்கேற்கவில்லை என் பது குறிப்பிடத்தக்கது.