நாளை சென்னை வரும் ராகுல் காந்தி.. கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, நாளை சனிக்கிழமை சென்னைக்கு வருகை தருகிறார். அப்போது, சென்னை தீவுத் திடலில் மாலை நடைபெறவுள்ள ‘மாணவர்கள் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்று, கல்லூரி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடுகிறார்.
நாளை சென்னை வரும் ராகுல் காந்தி.. கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல்!
Published on: 

மாணவர்களின் கருத்துகள், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறியும் வகையில், ராகுல் காந்தி நாடு முழுவதும் மாணவர்களைச் சந்தித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாகச் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில், கல்வி முறை, தேர்வுகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து மாணவர்களின் கருத்துக்களை ராகுல் காந்தி கேட்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழக காங்கிரஸ் கமிட்டி செய்து வருகிறது. கல்லூரி மாணவர்களுடன், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கு நாளை காலை விமானம் மூலம் வரும் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். அப்போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com