ராகுல்காந்தி அடுத்த மாதம் சென்னை வருகை: 150 அடி உயர கொடி கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றுகிறார்

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் அடுத்த மாதம் அரசியல் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி வருகை தர உள்ளார். அப்போது 150 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியையும் அவர் ஏற்றுகிறார்.
ராகுல்காந்தி அடுத்த மாதம் சென்னை வருகை: 150 அடி உயர கொடி கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றுகிறார்
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் சார்பில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அரசியல் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு நிதி திரட்டும் வகையிலும், கட்சியை சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்ளும் வகையிலும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், அரசியல் மாநாடு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கு நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், மனம் உடையோர் வாய்ச்சொல் அருளர், தன்னார்வலர் உழைப்பினை நல்கீர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

சென்னையில் காங்கிரஸ் சார்பில் அரசியல் மாநாடு அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் நடைபெற இருக்கிறது. இதில் எங்களின் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்.

முன்னதாக அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி நிறுவப்படும் 150 அடி உயரத்திலான பிரமாண்ட கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றுகிறார்.

இந்தியாவிலேயே அரசியல் கட்சி சார்பில் நிறுவப்பட்டு இருக்கும் கொடி கம்பத்தில் இது தான் அதிகமான உயரம் கொண்டது ஆகும். இந்த கம்பத்தில் பறக்கும் கொடி 60 அடி நீளமும், 40 அடி அகலமும் கொண்டது.

மார்ச் மாதம் முதல் வாரத்தில் என்ன தேதியில் மாநாட்டை நடத்தலாம் என்பது குறித்தும், ராகுல்காந்தி வருகையின் அதிகாரபூர்வ தகவலும், அந்த மாநாட்டில் பங்குபெறும் முக்கிய தலைவர்கள் யார்? என்பது குறித்தும் இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்யப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com