தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்


தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
x

எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து ராகுல் கருத்து கேட்டுள்ளார்.

சென்னை,

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கூடுதல் சீட் மற்றும் ஆட்சியில் பங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை காங்கிரஸ் வலியுறுத்தி வருவதால் கூட்டணிக்குள் சலசலப்பு நிலவுகிறது.இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் நேற்று முன் தினம் டெல்லியில் ராகுல் காந்தி கருத்து கேட்டபோது நடந்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் இன்று சென்னை திரும்பினார்கள். அவர்களிடம் இருந்து விசாரித்தபோது பல்வேறு சுவாரசியமான தகவல்கள் தெரிய வந்தது.

டெல்லியில் மாலை 5 மணிக்கு கூட்டம் தொடங்கி இருக்கிறது. கூட்டம் தொடங்கியதும் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் மாநில தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர், அகில இந்திய செயலாளர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர், உள்ளிட்ட அனைவரையும் ஒரே அறையில் அமர வைத்து விவாதம் நடந்திருக்கிறது.

அதை தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து ராகுல் கருத்து கேட்டுள்ளார். எம்.எல்.ஏக்களை தொடர்ந்து எம்.பிக்கள் அவர்களை தொடர்ந்து முன்னாள் மாநில தலைவர்கள், கடைசியாக அகில இந்திய செயலாளர்கள் என ஒவ்வொருவரிடமும் அவர் கருத்துகளை கேட்டுள்ளார்.

அவ்வாறு கருத்து தெரிவித்தவர்களில் முன்னாள் எம்.பி. ஒருவர் சில விஷயங்களை பட்டியலிட்டு தெரிவித்துள்ளார். அதாவது தேர்தலில் திமுக கூட்டணியால் காங்கிரசுக்கு கிடைக்கும் சாதகங்கள் பற்றி எடுத்து கூறியதோடு கள நிலவரம் வேறு விதமாக இருப்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

அதாவது திமுக மற்றும் காங்கிரஸ் அடிமட்ட தொண்டர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாத சூழல் நிலவுதை கோடிட்டு காட்டி உள்ளார். அதனை கவனமுடன் ராகுல் காந்தி கேட்டிருக்கிறார்.

பெரும்பாலான நிர்வாகிகள் பொதுவான கருத்துகளை மட்டுமே எடுத்து சொல்லி இருக்கிறார்கள். தொண்டர்களின் கருத்துகள் எதிர்பார்ப்புகள் பற்றி அவர்கள் பெரிய அளவில் எடுத்து சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரிடமும் பேசியபோது அவர்கள் தொகுதியின் வெற்றி வாய்ப்பு நிலவரம் தற்போதைய கூட்டணியில் நீடித்தால் என்ன லாபம், விஜய்யின் தவெகவுடன் இணைந்தால் என்ன பலன் கிடைக்கும் என்றெல்லாம் விலாவரியாக கேட்டு உள்ளார்.

அப்போது பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் எப்படியும் வெற்றி பெற முடியும் என்று ஆர்வக்கோளாறால் ராகுல் காந்தியை உற்சாகப்படுத்தும் வகையில் தெரிவித்துள்ளார்கள்.அதை கேட்ட ராகுல் காந்தி தன் கையில் வைத்திருந்த ரகசிய சர்வே அறிக்கை ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டு சம்பந்தபட்ட ஒவ்வொரு எம்.எல்.ஏக்களிடமும் அவர்கள் மீதான புகார்கள்,தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் எந்த மாதிரி சவால்களை சந்திக்க நேரிடம் என்ற உளவுத்துறை தகவல்களை கூறி இருக்கிறார்.

மொத்தத்தில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் மீண்டும் வெற்றி பெற முடியுமா என்ற சூழ்நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி இருகிறார். அதை கேட்ட எம்.எல்.ஏக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

இந்த களேபரத்துக்கு இடையே இன்று நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டம் பற்றிய விவாதமும் வந்திருக்கிறது. அப்போது உடனடியாக சென்னை திரும்பி எப்படி பொதுக்குழுவில் கலந்து கொள்வது. அதுமட்டுமன்றி பண்டிகை காலம் என்பதால் வெளியூர்களில் இருந்து வருகிற நிர்வாகிகள் எப்படி வாகனங்களை பிடித்து வர முடியும் என்று பல்வேறு வினாக்கள் எழுந்துள்ளது. அதை தொடர்ந்து செயற்குழுவை தள்ளி வைக்கும் முடிவை எடுத்துள்ளார்கள். அப்படித்தான் இன்று நடக்க இருந்த செயற்குழு நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கூடுதல் தொகுதிகள், அதிகாரப்பகிர்வு என்பதில் உறுதியான நிலைப்பாட்டில் மேலிட தலைவர்கள் இருப்பது பற்றிய தகவல் திமுக மேலிடத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 30 தொகுதிகள் வரை காங்கிரசுக்கு ஒதுக்க திமுக சம்மதிருப்பதாகவும் இது பற்றிய தகவலும் டெல்லி மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது,

தொகுதிகள் எண்ணிக்கையை பொறுத்தவரை 30 தொகுதிகள் என்றாலும் காங்கிரஸ் மேலிடம் சம்மதிக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில் மற்ற கட்சிகளுக்கும் திமுக தொகுதிகளை பங்கீட்டு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் முக்கியமாக தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சி அடையாமல் போனதற்கு காரணம் அடிமட்டத்தில் உள்ள உள்ளாட்சிகளில் உரிய பிரதிநிதித்துவம் காங்கிரஸ்கார்களுக்கு இல்லாமல் போனதுதான் என்ற ஆதங்கம் கட்சி தொண்டர்களிடம் இருக்கிறது.

உள்ளாட்சியில் உரிய பிரதிநிதித்துவம் கிடைத்தால் கட்சி தொண்டர்களுக்கும் உரிய மரியாதையும், அங்கீகாரமும் க்டைக்கும், எனவே அதை கேட்டு பெறுவதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக உள்ளது. 25 சதவீதம் முதல் 30 சதவீதம் இடங்களை கேட்பார்கள்.

அதுமட்டுமல்ல கடந்த முறை காங்கிரசுக்கு டெல்லி மேல்சபை சீட்டு எதையும் திமுக ஒதுக்கவில்லை. இந்த முறை அதிலும் ஒரு சீட்டை உறுதியாக கேட்கும். இதை மையமாக வைத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் நகரும். இனி பெரும்பாலும் டெல்லியிலேயே எல்லா விஷயங்களையும் பேசி முடித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே வெளியிடப்படுவதாக இருக்கும் என்றார்கள்.

1 More update

Next Story