சாலையில் தேங்கியுள்ள மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி

உடுமலை-பழனி இடையேயான தேசிய நடுஞ்சாலையில் தேங்கியுள்ள மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
சாலையில் தேங்கியுள்ள மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி
Published on

உடுமலை-பழனி இடையேயான தேசிய நடுஞ்சாலையில் தேங்கியுள்ள மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

உடுமலை-பழனி நெடுஞ்சாலை

தடையில்லா போக்குவரத்திற்கு ஏதுவாக நெடுஞ்சாலை துறை சார்பில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளை கடந்து செல்லும் இந்த சாலைகள் விரைவான பயணத்திற்கு வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது. இதனால் பல கிலோ மீட்டர் தூரத்தை கூட குறைவான நேரத்தில் விரைவாக சென்றடைய முடிகிறது.

அந்த வகையில் உடுமலையில் இருந்து பழனிக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் வெளி மாவட்டங்கள் சுற்றுப்புற கிராமங்களுக்கு இடைவிடாமல் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சூழலில் உடுமலை நகராட்சியின் எல்லையில் உள்ள வெஞ்சமடை வாய்க்கால் பாலத்திற்கு அருகே இணைப்பு சாலை சந்திக்கும் வளைவு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்பு நிகழ்ந்து வந்தது. அதைத் தொடர்ந்து அங்கு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அகலப்படுத்தப்பட்டு அதன் மையப் பகுதியில் கான்கிரீட் தடுப்புச்சுவர் வைக்கப்பட்டது. இதனால் விபத்துக்கள் குறைந்து பாதுகாப்பானபயணம் கிடைத்தது.

மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி

ஆனால் தடுப்புச்சுவரின் இரண்டு புறங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதில்லை. இதனால் அங்கு மண்குவியல், குவியலாக தேங்கி கிடக்கிறது. தற்போது தென்மேற்கு பருவமழையின் தொடக்கம் என்பதால் அதிகளவு காற்று வீசி வருகிறது. அப்போது அங்கே தேங்கியுள்ள மண் காற்றோடு காற்றாக பறந்து சென்று வாகன ஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை மண் பதம் பார்த்து வருவதால் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால் விபத்து நேரிடும் சூழல் நிலவி வருகிறது.

இதையடுத்து சாலையின் தடுப்புச்சுவரை யொட்டிய இரண்டு பகுதியிலும் தேங்கி உள்ள மண் அகற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பும் வாகன ஓட்டியில் மத்தியில் எழுந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com