

சென்னை,
சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் ஆண்டுக்கு 3,500-க்கும் அதிகமான ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இயக்கப்படும் ரெயில்களின் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்பட்டவையே. வெளிநாடுகளுக்கும் ரெயில் பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், சர்வதேச ரெயில் பெட்டிகள் கண்காட்சி ஐ.சி.எப். தொழிற்சாலையில் வரும் 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற இருக்கிறது.
இந்தக் கண்காட்சியில், நம் நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரான ரெயில் பெட்டிகள், ஜப்பான் உள்பட 6 வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்த ரெயில் பெட்டிகள் என மொத்தம் 90-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தயாரித்த ரெயில் பெட்டிகள் இடம்பெறுகின்றன.
குறிப்பாக, ரெயில் பெட்டிகளை பார்வையிட அழைத்துச் செல்லப்படுவதுடன், அவை எந்த வகையிலான தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது என்பதும் விளக்கப்பட இருக்கிறது. மேலும், வருங்காலங்களில் அதிநவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட உள்ள ரெயில் பெட்டிகளின் மாதிரிகளும், அதில் உள்ள பாதுகாப்பு முறைகளும் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கப்பட உள்ளன.
இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தவறாமல் சென்று ரெயில் பெட்டிகள் கண்காட்சியை பார்வையிட்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.