கணேசபுரத்தில் ரூ.226 கோடியில் ரெயில்வே மேம்பாலப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

ரெயில்வே உயர்மட்டப் பாலப் பணிகளை ஜி. எஸ்.சமீரன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கணேசபுரத்தில் ரூ.226 கோடியில் ரெயில்வே மேம்பாலப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
Published on

சென்னை,

கணேசபுரத்தில் ரூ.226.55 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாலப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் ஜி. எஸ்.சமீரன் அறிவுறுத்தினார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

உயர்மட்டப் பாலப் பணிகள்

பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், கணேசபுரத்தில் ரூ.226.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஜி. எஸ்.சமீரன் இன்று (02.07.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கணேசபுரத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது 62 சதவீதம் நிறைவடைந்து, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரெயில்வே பகுதியில் பைல்கள், பைல் கேப்கள் மற்றும் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 22.06.2026 முதல் சுரங்கப்பாதையில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டு ரெயில்வே பகுதியில் பியர் கேப் மற்றும் இரும்பு உத்திரங்கள் நிறுவுவதற்கான அடித்தளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், ரெயில்வே பகுதிக்குண்டான இரும்பு உத்திரங்கள் தயாரிக்கும் பணிகள் தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. ரெயில்வே துறை மற்றும் Research Designs and Standards Organization (RDSO) (ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு) களஆய்வுக்குப் பிறகு இரும்பு உத்திரங்கள் பணியிடத்திற்கு கொண்டு வரப்பட்டு, ரெயில்வே துறையின் மேற்பார்வையில் நிறுவப்படவுள்ளது.

ஆணையாளர் அறிவுறுத்தல்

கணேசபுரம் சுரங்கப்பாதை அருகில் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதைத் தவிர்த்திடும் வகையில் புதியதாக இரண்டு மழைநீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டுள்ளது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் பணிகள் விரைவில் தொடப்படவுள்ளது.

நடைபெற்று வரும் பணிகளைப் பார்வையிட்ட ஆணையாளர் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com