ரெயில்வே மேம்பால பணிகள்: செங்கோட்டை செல்லும் ரெயில்கள் ரத்து

மேம்பாலம் தூண்கள் பொருத்தும் பணி நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது.
ரெயில்வே மேம்பால பணிகள்: செங்கோட்டை செல்லும் ரெயில்கள் ரத்து
Published on

நெல்லை,

தென்காசி மாவட்டம் இலஞ்சி ரெயில்வே மேம்பாலத்துக்கான தூண்கள் பொருத்தும் பணி நாளை (சனிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி செங்கோட்டை ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ரெயில்வே மேம்பாலம்

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் இருந்து குற்றாலம் செல்லும் ரோட்டின் குறுக்கே தென்காசி -செங்கோட்டை ரெயில்வே பாதையும், கேட்டும் அமைந்திருந்தது. இங்கு கேட் அடைக்கும் போது நிலவிய போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் ரெயில்வே துறை இணைந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டுவதற்கு பணிகளை தொடங்கியது. இதில் மாநில நெடுஞ்சாலைத்துறை பாலத்தை கட்டி முடித்து விட்டது. ஆனால் தண்டவாளத்துக்கு மேல் உள்ள பகுதியில் மட்டும் ரெயில்வே துறையால் பாலம் இணைக்கப்படாமல் உள்ளது.

கிர்டர்கள் இணைக்கும் பணி

இதற்காக ரெயில்வே ஒப்பந்த நிறுவனம் இரும்பு தூண்கள் (கிர்டர்கள்) கொண்டு வந்து பாலத்தின் அருகே வரிசையாக இறக்கி போட்டிருந்தது. பகுதி, பகுதியாக இருந்த கிர்டர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இந்த கிர்டர்களை கான்கிரீட் தூண்கள் மீது தூக்கி வைத்து இணைத்து, கான்கிரீட் போடும் பணி நாளை (சனிக்கிழமை) தொடங்கி 31-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

ரெயில்கள் பகுதியாக ரத்து

இந்த பணிக்காக தென்காசி -செங்கோட்டை இடையே 3 நாட்களுக்கு சில ரெயில்கள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையிலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் (வண்டிஎண் 56776) செங்கோட்டை- நெல்லை பாசஞ்சர் ரெயில், செங்கோட்டை- தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரெயில் தென்காசியில் இருந்து புறப்படும். நெல்லையில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 56773) நெல்லை- செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் தென்காசி-செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும்.

மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் செங்கோட்டை பாசஞ்சர் (56771) ரெயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்டும். செங்கோட்டையில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படும் மதுரை பாசஞ்சர் ரெயில் (56772) செங்கோட்டை-தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. தென்காசியில் இருந்து வழக்கமான 12.33 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு செல்லும்.

இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com