மழை வெள்ள பாதிப்பு: மத்தியக் குழு இன்று சென்னை வருகை


மழை வெள்ள பாதிப்பு: மத்தியக் குழு இன்று சென்னை வருகை
x
தினத்தந்தி 6 Dec 2024 9:07 AM IST (Updated: 6 Dec 2024 10:07 AM IST)
t-max-icont-min-icon

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு இன்று மாலை சென்னை வருகிறது.

சென்னை,

வங்கக்கடலில் கடந்த மாதம் 23-ந்தேதி உருவான பெஞ்சல் புயல், 1-ந்தேதி மாமல்லபுரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது பலத்த சூறாவளி காற்றுடன் பேய் மழை கொட்டித்தீர்த்தது. அதனால் தமிழகத்தின் கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. அது தவிர சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிப்பு அடைந்தன. மேலும் மழை காரணமாக பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பேரிடர் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில் வெள்ளப் பாதிப்புகளை சீரமைக்க உடனடி நிவாரணமாக தமிழக அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக மு.க.ஸ்டாலினை, பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி, தமிழக வெள்ள பாதிப்பு நிலவரங்கள் குறித்தும், மீட்பு பணி குறித்தும் விவரித்தார்.

இந்த நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ள மத்திய குழுவினர் இன்று சென்னை வருகிறார்கள். நாளை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர். நிதி ஆயோக்கில் உள்ள மத்திய இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவினர் முதலில் புதுச்சேரியில் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்பிறகு தமிழகம் வர இருப்பதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story