

ஊட்டி,
ஊட்டி சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக, விளைநிலத்துக்குள் வெள்ளம் புகுந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் வழியாக நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களான நீலகிரி, கோவை உள்பட மாவட்டங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இதற்கிடையே கடந்த சனிக்கிழமை முதலே நீலகிரி மாவட்டத்தில் பரவ லாக மழை பெய்து வருகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி நகரம் சுற்று வட்டார பகுதிகளான லவ்டேல், மஞ்சூர், தாவணை, மல்லிக்கொரை மற் றும் நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர்பவானி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஊட்டியில் நிலவி வந்த காலநிலை மாறி பழையபடி ஊட்டி ஜில்லென்ற காலநிலைக்கு மாறியுள்ளது.
இந்த நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக காட்டேரி அணை அருகே உள்ள கோலணிமட்டம் பகுதியில் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்தது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் விளைபொருட்கள் சேதமடையும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மேலும் அந்தப்பகுதியில் உள்ள விவசாயிகள் தோட்டத்தை பாதுகாக்க தண்ணீரை வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வருவாய் துறையினர் மற்றும் அதிகரட்டி பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக பாலத்தில் உள்ள அடைப்பை சரி செய்ய வேண்டும். ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.