குமரியில் மழை நீடிப்பு: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மழை காரணமாக பாசனக் குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
குமரியில் மழை நீடிப்பு: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், நேற்று மீண்டும் பல இடங்களில் மழை பெய்தது. நாகர்கோவில், மயிலாடி, ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, தக்கலை, குளச்சல், இரணியல், குருந்தன்கோடு, குழித்துறை, சுருளோடு, முள்ளங்கினாவிளை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பதிவானது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் அதிகபட்சமாக 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

திற்பரப்பு அருவி பகுதியில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு குவிந்துள்ளனர்.குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். கூட்டம் அதிகரித்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று மட்டும் 1¼ அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 23.60 அடியாக இருந்தது. அணைக்கு 232 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 27 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு 165 கனஅடி தண்ணீர் வரத்து பதிவாகியுள்ளது.

மழை காரணமாக பாசனக் குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே கன்னிப்பூ சாகுபடிக்காக நேரடி விதைப்பு மற்றும் நாற்று நடும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாகுபடி பணிகள் மேலும் தீவிரமடைந்துள்ளன. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், கன்னிப்பூ சாகுபடிக்காக ஜூன் 1-ந்தேதி அணைகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் உருவாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com