மழை எதிரொலி: தமிழகத்தில் 5,667 குளங்கள் நிரம்பின

தொடர் மழை காரணமாக தமிழகத்தில் 5,667 குளங்கள் நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மழை எதிரொலி: தமிழகத்தில் 5,667 குளங்கள் நிரம்பின
Published on

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள ஏரிகள், பாசன குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளுக்கும் நாளுக்குநாள் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இவற்றின் கட்டுப்பாட்டில் 90 நீர்த்தேக்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.இவற்றின் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கன அடி (224.297 டி.எம்.சி.) ஆகும். இந்த ஏரிகளில் தற்போது 2 லட்சத்து 4 ஆயிரத்து 420 மில்லியன் கன அடி (204.420 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது.

90 நீர்த்தேக்கங்கள் சேர்த்து 91.14 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.மாநிலம் முழுவதும் உள்ள 14 ஆயிரத்து 138 பாசன குளங்களில் 5 ஆயிரத்து 667 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. 3 ஆயிரத்து 206 குளங்கள் 76 முதல் 99 சதவீதமும், 1,940 குளங்கள் 51 முதல் 75 சதவீதமும், 1,708 குளங்கள் 26 முதல் 50 சதவீதமும், 1,360 குளங்கள் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன.

257 குளங்களில் எதிர்பார்த்த அளவு மழை நீர் இல்லாமல் கோடை காலத்தில் கிடப்பது போன்று வறண்டுதான் கிடக்கின்றன. இந்த குளங்களுக்கு நீர் ஏன் வரவில்லை?, வரத்து கால்வாய்கள் அடைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.பருவமழை தொடர்ந்து தீவிரமானால் நீர்தேக்கங்களின் கொள்ளளவு மேலும் அதிகரித்து மேலும் 3 ஆயிரத்து 206 குளங்கள் நிரம்ப வாய்ப்பு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com