மழை, பலத்த காற்று: பாம்பன் குருசடை தீவுக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்

ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.
மழை, பலத்த காற்று: பாம்பன் குருசடை தீவுக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்
Published on: 

ராமேசுவரம்,

பருவமழை பெய்வதையொட்டி பாம்பன் குருசடை தீவுக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

குருசடை தீவு

பாம்பன் குந்துகால் அருகே நடுக்கடலில் உள்ளது குருசடை தீவு. வனத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த தீவுக்கு வனத்துறை சார்பில் சுமார் 20 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ராமேசுவரம் வரக்கூடிய அதிகமான சுற்றுலா பயணிகள் வனத்துறை மூலம் இயக்கப்படும் பைபர் படகில் பயணம் செய்து தீவின் அழகை பார்த்து ரசித்து வருகின்றனர். இதற் கிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.

படகு போக்குவரத்து நிறுத்தம்

இதனால் பாதுகாப்பு கருதி கடந்த 4 நாட்களாக குருசடை தீவுக்கு சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி பூஜை, விஜயதசமி 4 நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து நேற்று முதல் படகில் பயணம் செய்து குருசடை தீவை பார்ப்பதற்காக வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து இயக்கப்படாததால் கடற்கரையில் நின்று கடல் நடுவே தூரத்தில் தெரிந்த தீவை பார்த்தபடி மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பலத்த மழை பெய்வதுடன் அவ்வப்போது காற்றின் வேகமும் அதிகம் இருந்து வருவதால் பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மற்றும் மழை குறைந்த பின்னர் வழக்கம்போல் குருசடை தீவுக்கு படகு போக்குவரத்து இயக்கப்படும் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com