திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் முன்பு குளம் போல் தேங்கிய மழைநீர்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் முன்பு குளம் போல் தேங்கிய மழைநீரால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு உள்ளே செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் முன்பு குளம் போல் தேங்கிய மழைநீர்
Published on

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை காரணமாக ஒரே நாளில் அதிகபட்சமாக 154 மி.மீ மழை பதிவானது. மழை காரணமாக திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் முன்பு மழை நீர் குளம் போல் தேங்கியது.

பலத்த மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை திடீரென பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, பொன்னேரி, பூண்டி, திருவாலங்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

இந்த மழையால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தன. இந்த மழையால் திருவள்ளூர் வீரராகவர் கோவில் இருக்கும் இடத்தை சுற்றியுள்ள தெருக்களில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறிய கழிவு நீர் மழை நீருடன் கலந்து வீரராகவ கோவில் முன்பும் பக்கவாட்டு சாலைகளிலும் குளம் போல் மழை நீர் தேங்கியது.

154 மி.மீ மழை பதிவு

இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு உள்ளே செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். சிலர் தேங்கியிருந்த மழை நீரில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து மழை விட்டதும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் உடனடியாக தேங்கி இருந்த மழை நீரை அகற்றினர். இதனால் மழைநீர் தேங்கிய தடம் இல்லாமல் காய்ந்த தரையாக கோவில் முன்பு காணப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை 24 மணி நேரத்தில் 154 மி.மீ மழை பதிவாகி உள்ளது. ஆவடி 35 மி.மீ, திருவள்ளூர் 25 மி.மீ, திருத்தணி 22 மி.மீ, தாமரைப்பாக்கம் 12 மி.மீ, பூண்டி 11 மி.மீ, திருவாலங்காடு 11 மி.மீ, செங்குன்றம் 10 மி.மீ, பொன்னேரி 12 மி.மீ அளவு மழை பெய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com